கண்முன்னே நேரலையில் நடந்த பயங்கரம்..! 6-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 14 வயது சிறுமி!

 
1

ஜப்பானில் டிக்டாக் (TikTok) நேரலையின் போது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து தவறி விழுந்து 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சிறுமி ஜப்பானைச் சேர்ந்த ருகா (Ruka) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நடுநிலைப் பள்ளி மாணவியான இவர், தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடி பால்கனி கைப்பிடி சுவரில் அமர்ந்தபடி டிக்டாக் தளத்தில் நேரலை (Livestream) செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அவர் பின்னோக்கி சரிந்து கீழே விழுந்தார்.

இந்த கோர சம்பவம் முழுவதுமாக நேரலை கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், கீழே விழுவதைத் தடுப்பதற்காக சிறுமி சில வினாடிகள் கைப்பிடிச் சுவரை இறுக்கமாக பிடித்து தொங்கியபடி போராடியதும், பின்னர் பிடி நழுவி தரையில் விழுந்ததும் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ருகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேரலையைப் பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிலர், அந்த சிறுமி விபத்திற்கு முன்பாக "எனக்குப் பசிக்கிறது", "எனக்குப் பயமாக இருக்கிறது", "இது மிகவும் ஆபத்தானது" போன்ற வார்த்தைகளை தொடர்ந்து கூறி கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். அவர் கீழே விழுந்ததை தொடர்ந்து நேரலை துண்டிக்கப்பட்டது.

நேரலையின் போதே கண்முன்னே நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் ருகாவின் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளப் பின்தொடர்பாளர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக அந்த சிறுமி சில தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தங்களை எதிர்கொண்டு வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ள நிலையில், ஜப்பான் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.