ஆந்திராவில் கோர விபத்து: டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டிகளில் தீ - ஒரு பயணி பலி!
ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ரயில் அதிகாலை 2 மணியளவில் அனகப்பள்ளி பகுதியைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பி1 (B1) மற்றும் எம்1 (M1) ஆகிய இரண்டு ஏ.சி. பெட்டிகளில் திடீரெனத் தீப்பிடித்தது. தூக்கத்தில் இருந்த பயணிகள் பெட்டிக்குள் புகை மூட்டத்தைக் கண்டு அலறியடித்து எழுந்தனர். சுதாரித்துக் கொண்ட சில பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை (Alarm Chain) பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயில் நின்றதும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெட்டிக்குள் சிக்கியிருந்த பயணிகள் துரிதமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், இந்தத் தீ விபத்தில் சிக்கி பெண் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் மின்கசிவா அல்லது வேறு ஏதேனும் சதிவேலையா என்பது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


