இல்லத்தரசிகள் ஷாக்..! ‘இரட்டை சதம்’ அடித்தது சின்ன வெங்காயம் விலை..! முருங்கைக்காய், அவரைக்காய்: ரூ.100..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் பெய்த மழையால் சின்ன வெங்காய விளைச்சல் மற்றும் அறுவடை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னை கோயம்பேடு, மதுரை பரவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு மொத்த விற்பனை சந்தைக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சின்ன வெங்காயம் வரும். தற்போது வரத்து குறைவால் மொத்த மார்கெட்டுக்கு வரும் லாரிகளும் குறைந்துவிட்டன.
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வதாலும், கார்த்திகை மாதத்தில் பலரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவத்திற்கு மாறுவதாலும் காய்கறிகளுக்கான தேவை வழக்கத்தை விட உயர்ந்துள்ளது.
சிவகங்கை வாரச்சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 உருளை ரூ.60, பீன்ஸ் ரூ.100, கத்தரிக்காய் ரூ.80, பீட்ரூட் ரூ.40, கொத்தவரங்காய் ரூ.40, தக்காளி ரூ.40, பச்சை மிளகாய் ரூ.80, பாகற்காய் ரூ.50, கேரட் ரூ.50, வெண்டைக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் இன்றைய (19-11-2026) காய்கறி நிலவரத்தை பார்க்கலாம்.
பட்டாணி (குளிர்கால வரத்து): ரூ.100 – ரூ.200
அவரைக்காய்: ரூ.100 – ரூ.120
முருங்கைக்காய்: ரூ.100 – ரூ.120
பெரிய வெங்காயம்: ரூ.50 – ரூ.65
பீன்ஸ்: ரூ.70
கேரட்: ரூ.70
பாகற்காய் (பன்னீர் பாகற்காய்): ரூ.50
சுரைக்காய்: ரூ.50
அன்றாட சமையலுக்கு அத்தியாவசியமான சின்ன வெங்காயம் இரட்டை சதமடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைந்ததாலும், மழையின் காரணத்தாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

