உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து..!

 
1

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ரோடு ஷோ நிகழ்ச்சி பிரச்சாரம் செய்வதற்காக நாளை மாலை தேனி மாவட்டத்திற்கு வருகை தருவதாக கூறப்பட்டிருந்தது.

இதற்காக தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் தேனி ரயில்வே கேட் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரும்புக் கம்பிகளால் சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தொண்டர்கள் அதன் பின் நின்று ரோடு ஷோ நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக அமித்ஷா வேறுறொரு நாளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அமித்ஷாவின் அடுத்த கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது