தொடர் விடுமுறை : சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. சென்னையில் இருந்து 635 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

 
bus

முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை  முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றன.  

பண்டிகைக் காலம், தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அந்தவகையில், நேற்று ( ஆக.23) சுபமுகூர்த்த நாளாகும். இதேபோல் இன்று ( ஆக.24) சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுகிழமை தொடந்து நாளை மறுநாள் ( ஆக.26) கிருஷ்ணர் ஜெயந்தி என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாகும்.  சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

BUS

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நேற்று(ஆக.23) மற்றும் இன்றும்  (சனிக் கிழமை)  485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடந்து நாளை  மற்றும்   கிருஷ்ண ஜெயந்தி ( ஆக.26) அன்று கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும்  இயக்கப்படுகின்றன. 

அத்துடன்  திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு  2 நாட்களுக்கு  சென்னை கோயம்பேட்டிலிருந்து 70 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து  20 பேருந்துகளும், மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  

இதேபோல்  திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.  தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.