விடுமுறை ஓவர்..! இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு; தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த 7 கட்டளைகள்!
Jan 5, 2026, 05:45 IST1767572115000
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. இது தவிர கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையும் வந்ததால் சென்னை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைந்தது இன்று பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நாளில் சென்னைக்கு படையெடுத்தனர்..இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் நாளில் (ஜனவரி 5) மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறையில் அமர்வதை உறுதி செய்யக் கீழ்க்கண்ட பணிகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும்:
- மின் இணைப்புகள் ஆய்வு: தொடர் மழையால் சுவர்கள் ஈரமாகியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகள், சுவிட்ச் போர்டுகள் (Switch Boards) மற்றும் வயர்களில் ஏதேனும் மின்கசிவு உள்ளதா என்பதைத் திறமையான எலக்ட்ரீஷியனைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
- கட்டிட உறுதித்தன்மை: பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் மழையினால் பலவீனமாகி உள்ளனவா என்று சோதிக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் அல்லது சுற்றுச்சுவர் பகுதிகளுக்கு மாணவர்கள் செல்வதைத் தடுக்கத் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
- சுத்தமான குடிநீர்: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் (Overhead Tanks) மற்றும் தரைமட்டத் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டுச் சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சிய, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வளாகத் தூய்மை: பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியிருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். புதர்கள் மண்டிக்கிடந்தால் அவற்றை வெட்டிச் சுத்தம் செய்ய வேண்டும்.
- டெங்கு தடுப்பு: டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வேண்டும்.
- கழிவறைப் பராமரிப்பு: கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டுச் சுத்தம் செய்வது அவசியம்.
- சத்துணவு மையம்: சத்துணவு கூடங்கள் மற்றும் சமையல் அறைகளில் மழைநீர் கசிவு உள்ளதா என்பதைச் சமையலர்கள் உறுதி செய்த பிறகே சமையல் செய்யத் தொடங்க வேண்டும்.


