தவெக விழாவில் குத்தாட்டம் போட்ட HM சஸ்பெண்ட்

 
s

ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றி கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடைநீக்கம் செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.


தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் தற்போது வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஒரத்தநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி விழா மேடையில் சினிமா பாடலுக்கு நடனமாடினார். இவர் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது. அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பவர் /ஒரு அரசியல் கட்சி நடத்திய கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்று நடன மாடியது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. 

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பட் டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகனுக்கு கல்வித்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தினர். இதன் பேரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், தமிழக வெற்றி கழகம் நடத்திய மகளிர் தின விழாவில் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டு மேடையில் நடனம் ஆடியது உண்மை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை நன்னடத்தை விதியை மீறி அரசியல் கட்சி நடத்திய விழாவில் கலந்து நடனமாடியதின் மூலம் பணித்தன்மைக்கு பங்கம் விளைவித்ததாக கூறி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டார். அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் தமிழக வெற்றி கழகம் நடத்திய விழாவில் பங்கேற்று நடனமாடியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.