YMCA மைதானத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி.. 8 இடங்களில் பார்க்கிங் வசதி - காவல்துறை அறிவிப்பு..
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சிக்கான வாகன நிறுத்துமிட ஏற்பாடு குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நந்தனம் YMCA மைதானத்தில் மாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திரைப்பட நடிகர் மற்றும் பாடகர் Hip Hop Tamizha Adhi அவர்களின் Hip Hop Tamizha Adhi இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேற்படி இசை நிகழ்ச்சியினை காண வரும் பொது மக்கள் பொது போக்குவரத்தான மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் சைதாப்பேட்டை நந்தனம் சந்திப்பை அடைந்து இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு இலகுவாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தங்களது சொந்த வாகனத்தில் வரும் பார்வையாளர்கள் சற்று முன்கூட்டியே இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றடையுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். நிகழ்ச்சியினை காண வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த YMCA வளாகத்தினுள் 8 இடங்களில் வாகனம் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர நந்தனம் அரசு கலை கல்லூரி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழக வழியாக மாடல் ஸ்கூல் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகிய மைதானங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மேற்கூறிய வாகனம் நிறுத்துமிடங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொது போக்குவரத்து மூலம் வரும் பார்வையாளர்கள் நந்தனம் சந்திப்பில் இருந்து Fire Service Station க்கு அருகில் உள்ள பாதை வழியாக நடந்து இசைநிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றடையலாம். பார்வையாளர்கள் தாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு இசைநிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே YMCA மைதானம் சென்று போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.