ஆலய சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களே கொள்ளை அடிக்கின்றனர் - இந்து முன்னணி குற்றச்சாட்டு..!

 
1

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

இரண்டு நாட்களுக்கு முன் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் பணத்தை எண்ணிய ஊழியர்களே இலட்சக்கணக்கில் அபேஸ் செய்து ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த துணிச்சல் வருவதற்கு காரணம், திமுக அரசின் இந்து விரோத சிந்தனை தான் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். ஒரு புறம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆலய சொத்துக்களை மீட்டோம், நிலங்களை மீட்டோம் என மிகைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு புறம் அவரது துறை ஊழியர்கள் ஆலய சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள்.

உண்டியல் பணத்தை திருடுகிறார்கள் என்பது மிகவும் கேவலமான செயல். கோவில் சொத்துக்களை காக்க வக்கற்ற அரசு கோவில்களை ஆன்மிக பக்தர்களிடம், சமயப் பெரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வது தான் நேர்மையான செயலாகும். கோவில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு சரியான நடைமுறை வகுக்கப்பட வேண்டும். உண்டியல் திறப்பு முன்கூட்டியே அறிவிப்பு பலகையில் பக்தர்கள் அறிய வைக்க வேண்டும். தக்க முன்னேற்பாடுகளைச் செய்யாமல் திருட்டு போனபிறகு நடவடிக்கை என்பது திருட்டுக்கு உடந்தையான செயல் என்றே கருதத் தோன்றுகிறது. முறைகேடுகளில் ஈடுபடும், திருடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மூடி மறைக்க அதிகாரிகள் துணை போகக்கூடாது. தொடர்ந்து உண்டியல் காணிக்கை திருட்டு சம்பவங்கள் நடப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணை போகின்றனரா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும். பக்தர்களின் பக்தியுடன் வேண்டுதல் நிறைவேறவேண்டும் என்ற நோக்கத்துடன் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், பணத்தை அலட்சியம் செய்யாமல் இனி இதுபோல் நடக்காமல் தடுக்க தக்க ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.