தொடரும் பதற்றம் : வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் படுகொலை..!

 
1 1

வங்காளதேசத்தின் வடக்கே அமைந்துள்ள மைமன்சிங் மாவட்டம் திரிஷால் பகுதியில், 60 வயதான இந்து தொழிலதிபர் சுஷென் சந்திர சர்க்கார் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிறுபான்மையினரிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று சுஷென் சந்திர சர்க்காரின் மகன் தனது தந்தையைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப் பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால், தந்தையிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் சந்தேகமடைந்த அவர், நேரில் சென்று தேடியுள்ளார். அப்போது சுஷென் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

Advertisement

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மைமன்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இக்கொலை குறித்த தகவலை திரிஷால் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹசன் இஸ்ராப் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இக்கொலைக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மைமன்சிங் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்து சிறுபான்மையினர் மீது பல தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, கடந்த டிசம்பர் 18-ம் தேதி தீபு சந்திரதாஸ் என்ற இந்து தொழிலாளியும் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நிகழும் இத்தகைய படுகொலைச் சம்பவங்கள் வங்காளதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.