தேசிய நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துகள்- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
தமிழ்நாடு நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துகள் இடம்பெற்ற விவகாரத்தில், அதற்கு காரணமானதாகக் கூறப்படும் இரண்டு அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் SH-93 பலகையில் இந்தி இடம்பெற்ற விவகாரத்தில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டதுடன், நெடுஞ்சாலைத்துறை சார்ந்த இரு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யபட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH−93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

