நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட தடையில்லை.. ஹைகோர்ட் உத்தரவு.. விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..

 
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட  எந்த தடையும்  இல்லை  என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  அண்மையில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,  மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.  இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள்  மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரை செய்யும் பணி நடந்து வந்த நிலையில்  2 கட்டங்களாக  தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தேர்தல்

இதற்கிடையே வார்டு  இடஒதுக்கீடு செய்யும்  பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும்  வார்டு வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலையும்  நேற்று வெளியிட்டது.  முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இதனை விசாரித்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணைய விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும், வேட்பு மனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கண்காணிப்புக் கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

இந்நிலையில் மீண்டும், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம்  மேற்கொள்ளும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனவே தமிழகத்தில்  விரைவில் 21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.