டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட ஐகோர்ட் அனுமதி

 
tasmac

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும்  மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Highcourt

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுபாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் பார் உரிமையாளர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி சி.சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேநேரம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மேலும், தனது உத்தரவில், 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் மேலும் அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்று தெரிவித்துள்ளார். மதுவிலக்கு சட்டப்படி மதுபான கடைகளோடு தின்பண்ட கடைகள் மற்றும் பார்கள் அமைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட  எட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்து நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார்.

Tasmac 'bars' open in Tamil Nadu after 9 months | தமிழகத்தில் 9  மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் 'பார்'கள் திறப்பு

 தனி நீதிபதிகளின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்குகளை  விசாரித்த முதன்மை அமர்வு  வந்தபோது வழக்கிற்கு அப்பாற்பட்டு டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளதாகவும், மனுதார்கள் யாரும் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.இந்த வாதத்தை கேட்ட முதன்மை அமர்வு தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ள தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

டாஸ்மாக் நிறுவனம் பார்களை நடத்துவது தொடர்பான கொள்கை குறித்து அவர்களது தரப்பு கருத்தை தெரிவிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.இந்த அம்சத்தை பொறுத்தவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை என்றும்  இதன் மூலம் டாஸ்மாக் நிறுவனம் பார்களை நடத்துவது தொடர்பான கொள்கையை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் தெரிவித்துள்ளனர்,பார்கள் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டு டெண்டர் கோரலாம் என தெரிவித்துள்ள நீதிபதிகள்,டெண்டரில் பங்கேற்கபவர்களிடம் பார்கள் நடத்துக்கூடிய இட உரிமையாளர்களிடமிருந்து தடையில்லை சான்றிதழ் பெற வேண்டும் என வலியுறுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.