சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜாபர் அலியின் உடலை தோண்டி எடுத்து புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை வெங்கலுரைச் சேர்ந்த மரியம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சுற்றுச்சூழல் ஆர்வலரான எனது கணவர் ஜாபர் அலி கடந்த 17ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடந்த 17ஆம் தேதி காட்டுபாபா மசூதியில் இருந்து தொழுகையை முடித்து வந்தவர் டிப்பர் லாரி ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை. புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குவாரிகளிடமிருந்து ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்தன. சட்டவிரோத குவாரிகளால் 840 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது தொடர்பாக 17ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என குறிப்பிட்டிருந்தார். இவை தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டினர்.
சாலை விபத்தில் எனது கணவர் உயிரிழந்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த கணவரின் உடல் ஜனவரி 18ஆம் தேதி மாலை 4 மணியளவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டாலும், அறிக்கை தரப்படவில்லை. உடற்கூறு ஆய்வு தொடர்பான வீடியோ பதிவு கோரிய எங்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 10 நாட்கள் தாமதத்திற்கு பின்பு உடற்கூறாய்வு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலில் நடைபெற்ற உடற்கூறாய்வு உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும் அதன் முதல் தகவல் அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவில்லை. 20 கிலோமீட்டர் தொலைவில் தடய அறிவியல் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகள் இருந்தும், திருமயம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ததும், காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போதுமான தடயங்களை சேகரிக்க தவறியதும் வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்லுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே ஜாபர் அலியின் உடலை தோண்டி எடுத்து, இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, எங்கள் நிபுணரையும் இணைத்து, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுத்து, மறுஉடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் உடற்குழாய்வு செய்த மருத்துவர் ஆஜராகி லாரி ஏறியதில் ஏற்பட்ட எலும்பு முறிவுகளும் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயமுமே உயிரிழப்பு காரணம் என தெரிவித்தார். அதை எடுத்து நீதிபதி லாரி ஏரி இறங்கியதில் ஏற்பட்ட எலும்பு முறிவும் காயமுமே இறப்பிற்கு காரணம் என்பது அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது இந்நிலையில் எக்ஸ்ரே எடுக்க வேண்டியது அவசியம் என்ன? இதனால் இச்சம்பவத்தை அரசியலுக்காகவும் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்த நேரிடலாம் என கருத்து தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் எக்ஸ்ரேகளை செய்வது கூடுதல் ஆவணமாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், " ஜாபர் அலியின் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, "புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட எக்ஸ்ரே செய்ய தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய காவல்துறை பாதுகாப்புடன், ஜாபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும். ஊடகங்களோ, வேறு யாருமோ அனுமதிக்கப்படக்கூடாது. செல்போனில் புகைப்படங்களை எடுக்கவும் அனுமதிக்க கூடாது. உடல் எக்ஸ்ரே செய்யப்படுவது தொடர்பான எந்த புகைப்படமும் விசாரணைக்காக அன்றி வேறு இடங்களில் பகிரப்படக்கூடாது. எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இயன்ற அளவு விரைவாக இந்த நடவடிக்கையை செய்து முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.