மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

 
மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன்

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் கமிஷனருக்கு பறந்த கடிதம்... ஜாய் கிறிஸில்டா புகாரில் மாதம்பட்டி  ரங்கராஜ் மீது பாயும் நடவடிக்கை; விரைவில் கைது?

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக  பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார். இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா  இடையில் மத்தியஸ்தம் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் நியமித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு  தான் தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்படி இரு தரப்பினருக்கும்  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் என இரு தரப்பிலும் மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மரபணு பரிசோதனைக்கு பின், அறிக்கையைப் பெற்று, அதனை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கும்படி வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 30 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.