ஜெம் வீரமணி POCSO வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த ஐகோர்ட் தடை
ஜெம் வீரமணி POCSO வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானது குறித்து விசாரிக்கக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜெம் வீரமணி POCSO வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள், பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல.ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள், காவல்துறை மற்றும் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே வீரமணி வழக்கில் சாந்தி,மகேந்திரசிம்ஹன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, சென்னை மத்திய குற்றப்பிரிவு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜாமீன் மனுக்களின் விசாரணை செப்டம்பர் 29க்கு தள்ளிவைத்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதில் எந்த ஒரு தாமதமும் இல்லை. அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

