ஜாகிங் செய்தபின் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்..!

 
Q

ஜாகிங் செய்தபின் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் வெளியிடப்படுகிறது. இதனால் நாம் களைப்பாக உணர்கிறோம். மேலும் உடலில் சில தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடலின் செயல்பாடுகள் அதிக வேலைகளில் ஈடுபடுகிறது. மேலும் தசைகள் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற்று அதற்கான புதுப்பித்தல் வேலையைத் தொடங்குகிறது. எனவே அதற்கு ஏற்ப அதிக புரோட்டின் சத்துகள் நிறைந்த உணவை உண்ண வேண்டும். அதற்கு அமினோ ஆசிட் அர்ஜினைன், லைசின், க்ளூடமைன் மறும் பி.சி.எ.எ போன்ற புரதச் சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.

வாழைப்பழம் : வாழைப்பழத்தில் அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் இருக்கிறது. இது உடற்பயிற்சி செய்வோருக்கு கட்டாயம் உதவும் சிறந்த பழம். அவர்களின் ஆற்றலின் அளவை குறையாமல் போதுமான ஆற்றலை அளிக்கிறது. அதனால்தான் உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடச் சொல்வதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று.

பழங்கள் மற்றும் காய்கறிகள் : பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டிலும் ஆண்டி ஆக்சிடன் இயற்கையாகவே இருப்பதால் அவற்றை உண்ணும்போது உடலில் உள்ள கொழுப்புக் கட்டிகளை குறைக்க உதவுகிறது. உதாரணத்திற்கு, முட்டைகோஸ், கொத்தமல்லி ஆகியவற்றில் அமினோ ஆசிட் க்ளுடமைன் அதிகமாக இருக்கிறது. இது ஜாகிங் போது ஏற்படும் இரத்தத்தின் க்ளுடமன் குறைப்பாட்டை ஈடுசெய்ய உதவுகிறது. தசைகளையும் அதன் உற்பத்தி வேலையைத் தொடங்க உதவுகிறது. எனவே அதிக புரோட்டின் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் உண்ணலாம்.

ஓட்ஸ் : ஓட்ஸில் ஃபைபர் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது. அதேபோல் இவை கொழுப்பை அதிகரிக்காமல் சமன்செய்து உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறது.

நட்ஸ் வகைகள் : பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டைவகைகளில் அதிக அளவில் புரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றல் சக்தியை அளித்து கொழுப்பின் அதிகரிப்பையும் குறைக்கிறது. இவற்றை ஓட்ஸ் சாப்பிடும்போது அதோடு கலந்து சாப்பிடலாம். மில்க்‌ஷேக்குகளிலும் கலந்து அருந்தலாம்.

காய்ந்த விதை : பூசணி விதையில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, நார்சத்து, புரதம், இரும்புச் சத்து மற்றும் விட்டமின் இ ஆகியவை நிறைந்திருக்கின்றன. இதனை 100 கிராம் உண்டால் 600 கிராம் கலோரிகளைப் பெறலாம். வறுத்த பூசணி விதைகளும் கிடைக்கின்றன. அப்படியே நொறுக்குத் தீனியாகவும் உண்ணலாம்.

சிக்கன் பிரெஸ்ட் : சிக்கன் யாருக்குத்தான் பிடிக்காது. சிக்கனிலேயே பிரெஸ்ட் பகுதிதான் குறைந்த கலோரி கொண்டது. இது ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட. இதனை வேகவைத்து சாப்பிட்டால் அன்றைய நாளின் நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்கும்.