என் வங்கி கணக்கில் இருந்த ரூ.23 லட்சத்தை காணவில்லை! மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை புகார்

 
ராமர் பிள்ளை

என் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.23 லட்சத்தை காணவில்லை என மூலிகை மூலம் பெட்ரோல் தயாரித்த ராமர் பிள்ளை புகார் மனு அளித்துள்ளார்.

ராமர் பிள்ளை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தான் ராமர் பிள்ளை. கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் மாற்று எரிபொருளை கண்டுபிடித்துள்ள ராமர் பிள்ளை, 500 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் அளவு மூலப் பொருள்களை சேமித்து வைத்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் அளவிற்கு கன்னியாகுமரி – நாகர் கோவில் இடையே தொழிற்சாலை ஒன்று தயாராகவுள்ளதாகவும் கூறியிருந்தார்.  காப்புரிமை பெற்றவுடன் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 15-க்கு கிடைக்கும் என்றும் உறுதி அளித்தியிருந்தார். மேலும் மூலிகை பெட்ரோலை உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்திலும் பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பை வைத்து தான் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தன் மீது வழக்கு பதிவு செய்ததுடன், எனது வங்கி கணக்கையும் முடக்கியதாக புகார் கூறியுள்ள ராமர் பிள்ளை,  23 ஆண்டுகளாக CBI நீதிமன்றத்தால் முடக்கி வைக்கப்பட்ட எனது பணம் 23 லட்சம் ரூபாய் தி.நகர் யூகோ வங்கியில் காணாமல் போய்விட்டதாம்..? ரிசர்வ் வங்கி வரை தேடிட்டாங்களாம் அப்பவும் கிடைக்கவில்லையாம்.. கேட்டால் பேங்க் மேனஜர் கண்ணீர் விடுகிறார் என்றார். மேலும் 23 வருட சட்டப் போராட்டத்திற்கு பிறகு என் மீதும், என் மூலிகை பெட்ரோல் மீதும் தவறு இல்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து சிபிஐ முடக்கிய பணத்தை கேட்டால் வங்கி நிர்வாகிகள் "உங்கள் பணம் எங்கு போனதென்று தெரியவில்லை" என்று கூறி வங்கி மேனேஜர் அலைக்கழிப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் காவல்துறை தலையிட்டு என்னுடைய பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்றும் ராமர் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.