ஹேமந்த் சோரனுக்கு தற்காலிக ஜாமீன்!

 
1

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஹேமந்த் சோரனின் மாமா கடந்த வாரம் (ஏப். 30) இறந்ததால், இறந்தவருக்கு சடங்குகள் செய்ய அவருக்கு இன்று உயர்நீதிமன்றத்தால் தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் வெளியில் வந்திருந்தாலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கும், அரசியல் அறிக்கை கொடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று (மே 3) நிராகரித்தது.

ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வின் முன் இந்த வழக்கை அவசர வழக்காக கருத்தில் கொண்டு விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், மே.13 அன்று ஜார்க்கண்ட்டில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவையும், தீர்ப்புக்கெதிரான மனுவையும் நிராகரித்து தீர்ப்பு வழங்கியது. இதனால், எங்கள் உரிமைகள் நசுக்கப்படுகிறது என்று கபில் சிபல் வாதாடினார்.

நீதிபதிகள் அமர்வு கபில் சிபலின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், இடைக்கால ஜாமீன் கோரிய மனு மே.7 அன்று விசாரணைக்கு வருவதையும் குறிப்பிட்டது. ஜாமீன் மனுவுடன் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவையும் சேர்க்க வேண்டும் என்று கபில் சிபல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.