நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா? தமிழக அரசு விளக்கம்

 
ஹெலிகாப்டர்

நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

தேனி : இன்றுடன் முடிந்த ஹெலிகாப்டர் சுற்றுலா - மீண்டும் பயணிக்க ஒரு குட்  நியூஸ்!

ஊட்டியில்  இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக  மே 13 முதல் 30ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா  நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரை சேர்ந்த பேராசிரியர் டி.முருகவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது எனவும், மலைபகுதிகளில் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தும் என்பதால் மக்கள், யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் ஹெலிபேட் அமைந்துள்ளதால், பறவைகள், வன மற்றும் வீட்டு விலங்குகள் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என அச்சம் தெரிவித்துள்ளார். மேலும், பறவைகள் மோதினால் ஹெலிகாப்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு வானிலை சீற்றத்தால் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோர் பலியான சம்பவம் குறித்தும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரி வனப்பகுதியில் ஏறத்தாழ 250 கழுகுகள் மட்டுமே உள்ளன என்றும், ஹெலிகாப்டர் போக்குவரத்து, மனித நடமாட்டம், வாகன போக்குவரத்து, வேட்டையாடுதல் போன்றவற்றால் அவற்றின் வருகை 35.7 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே வரும் 13ம் தேதி தொடங்கவுள்ள ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.வி.சுரேஷ்குமார் ஆஜராகி, மணிக்கு ஒருமுறை கால நிலை மாறுவதால் ஹெலிகாப்டர் சுற்றுலாவை இயக்குவது பாதுகாப்பானது அல்ல என வாதிட்டார். நீலகிரியில் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் ஆராயவில்லை எனவும், வனத்துறையிடம் ஆலோசிக்கவில்லை எனவும் செய்தி வெளியாகி உள்ளதாகவும் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி பஃப்பர் ஜோன் என அழைக்கப்படும் காடுகளுக்கு இடைப்பட்ட இடங்கள்  மற்றும் நகர பகுதிகளில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தும் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், விளம்பரம் மட்டுமே வெளியிடபட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அரசு தரப்பு விளக்கத்தை பதிவுசெய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மே 17ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தள்ளிவைத்தனர்.