ஹெலிகாப்டர் விபத்து: மேஜர் ஜெயந்த் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - டிடிவி தினகரன் வலியுறுத்தல்..

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக வீரர் மேஜர் ஜெயந்தின், குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று ராணுவ ஹெலிக்காப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய அதே பகுதியில் 2 பைலட்டுகளின் உடலும் கண்டறியப்பட்டது. இதில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரது உடல்களுக்கு டெல்லி விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மேஜர் ஜெயந்த்தின் உடல் திருச்சி அல்லது மதுரை செல்லும் விமானம் மூலமாகவோ கொண்டு வரப்பட உள்ளது.
அங்கிருந்து மாவட்ட ஆட்சியர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு தேனி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தேனியை சேர்ந்த ஜெயந்த் என்ற விமானி உயிரிழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஜெயந்த்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ராணுவ வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ஜெயந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.