மாவட்ட செயலாளராக அறிவித்ததற்கே இவ்வளவு ஆட்டமா? தவெகவினரின் அலப்பறையால் நடுரோட்டில் தவித்த மக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் ஜே.ஜே. செந்தில்நாதன் என்பவர் நீண்ட நாட்களாக விஜய் ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக 2-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் நடிகர் விஜய் வெளியிட்டார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது . மாநாட்டை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக 19 நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது. தற்போது மூன்று கட்டமாக 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்களை கொண்டாம் விதமாக மாவட்டம் தோறும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் விஜய் ரசிகர்களும் இதை கொண்டாடி வருகின்றனர்
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ஜே ஜே செந்தில்நாதன் நியமிக்கப் பட்டதை கொண்டாடும் விதத்தில் கட்சியின் மற்ற நிர்வாகிகளும் விஜய் ரசிகர்களும், இன்று ராசிபுரத்தின் முக்கிய சாலைகள் வழியாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி ஊர்வலமாக சென்றனர். ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் இருந்து துவங்கிய ஊர்வலமானது, அண்ணா சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்று அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . தொடர்ந்து அங்கிருந்து ஒரு வழிப் பாதையில்(ONEWAY) பயணித்த ஊர்வலமானது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ராசிபுரம் பழைய பஸ் நிலையம் வந்து நிறைவு பெற்றது . சுமார் 4 கிலோமீட்டர் ஊர்வலமாக நிர்வாகிகள் படைசூல இருபதுக்கு மேற்பட்ட கார்களுடன் ஊர்வலம் நடைபெற்றதால் ராசிபுரம் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.
இந்நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜே. ஜே.செந்தில் நாதனை மாரியம்மன் கோவிலில் இருந்து மாலை அணிவித்து நிர்வாகிகள் படை சூழ அண்ணா சாலை வழியாக பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ராசிபுரத்தில் முக்கிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையான அண்ணா சாலை, ஒரு வழிப்பாதை வழியாக 2 மணி நேரமாக ஊர்வலம் சென்றதால் ராசிபுரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கட்சி துவங்கி ஒரு வருடமே ஆன நிலையில், மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட உடனே, கொண்டாட்டங்களை ஆரம்பித்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில், போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தியது, பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் .