கனமழை எதிரொலி : கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குடகு , தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் , ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதாலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாலும், கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், அத்துடன் இடைவிடாது மழை பெய்து வருவதாலும் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.