இன்னும் தணியாத பேரழிவு: மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என பீதி!

 
1

 நம் அண்டை நாடான நேபாளம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், அதிக உயரத்தில் உள்ள ஏரி உடைந்ததால் உருவான மிகப் பெரிய வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.இந்த இயற்கைச் சீற்றம் நடந்து மூன்று நாட்களாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நேபாள பகுதிகள் முழுதும், வெள்ள நீரால் அடித்து வரப்பட்ட சகதியில் மூழ்கியுள்ளது. வெள்ளப் பெருக்கில் பல பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.சகதி மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.இந்நிலையில், வெள்ளப் பெருக்குக்கு காரணமான, கோஷி ஆற்றின் மேல் பகுதியில், திபெத்தில் புதிதாக உருவாகியுள்ள தற்காலிக ஏரி எந்த நேரத்திலும் உடையக்கூடும் என நேபாளத்துக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது-.புதிதாக உருவாகியுள்ள தற்காலிக ஏரியில் 24 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளது. அது தொடர்ந்து நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் அந்த தற்காலிக ஏரி எந்த நேரத்திலும் உடைந்து நேபாளத்துக்கு பாயக் கூடும் என, சீன தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேற்று பெய்த மழையினால் போட்டே கோஷி ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கடும் கனமழை பெய்யக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திடீர் வெள்ளப் பெருக்காமல் பேரழிவை சந்தித்துள்ள தேபாளத்தில், பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, மூன்று நாட்களில் 229.5 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் மண்டலங்களாக நேபாள அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, பல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர். பேரிடர் நடந்து முதல் 36 மணி நேரத்துக்குள் 191 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 38.55 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய பங்களிப்புகளுடன், நிதியின் இருப்புத் தொகை 217 கோடி ரூபாயில் இருந்து 409 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தனர்.

நேபாளத்தில் பேரிடருக்கு பிந்தைய மறுசீரமைப்பு பணிகளுக்கு, 47,500 கோடி ரூபாய் வரை தேவைப்படலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். தற்போதைய இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த முழுமையான கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதால் இத்தொகை மாறுபடலாம் என கூறப்படுகிறது-. கடந்த, 2015ல் நடந்த கோர நிலநடுக்கத்தின் போது மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக, 85,500 கோடி ரூபாய் தேவை என்று கணிக்கப்பட்டிருந்தது.

திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இன்று 669ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2,400க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 163 வெளிநாட்டவர் உட்பட, 2,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் படை தெரிவித்துள்ளது. நேபாள ராணுவத்தைச் சேர்ந்த, 5,000 பேர் உட்பட, 11 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.