கனமழை எதிரொலி- சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் கனமழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு 5 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தற்பொழுது தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடை களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஐப்பசி மாதம் சனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


