நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

 
மழை

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “ நேற்று  (13-08-2025) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (14-08-2025) 08. 30 மணி அளவில்  வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு  வங்கக்கடல், தெற்கு ஒரிசா  - வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில்  நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா  - வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும்.

மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன்காரணமாக இன்று (ஆக.14)  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வானிலை மையம் தகவல்..

நாளை (ஆக 15)  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

16-08-2025 முதல் 20-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்றும் நாளையும் (ஆக 14, 15)  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.