தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

 
rain

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக  இன்று ( அக். 08)  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக  திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

மழை
        
இதேபோல் நாளை ( அக். 09)  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும் எனவும்,  திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.