சென்னையில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழை.. அதிகபட்சமாக மணலியில் 15செ.மீ மழை பதிவு..

 
சென்னை மழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.  இதேபோல் வேலுர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. 

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  மேலும், மேற்கு திசை காற்றின வேகமாறுபாடு காரணமாக சென்னை உடபட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்திருந்தது.

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது. அதன்படியே,  சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 

மழை

சென்னை மந்தைவெளி, மயிலாப்பூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், சென்ட்ரல், ராயபுரம், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், கீழப்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், திருவான்மியூர், மாம்பலம், மடிப்பாக்கம் என சென்னையின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.  

இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், போரூர், பூந்தமல்லி, மதுரவாயல் , அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்த்து. அதிகபட்சமாக மணலியில் 15செ.மீ, ஆவடியில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அம்பத்தூர், திருநின்றவூரில் தலா 8செமீ, செங்குன்றம் 6செமீ, சோழவரம் 5செமீ, திருவள்ளூர், பள்ளிப்பட்டு, தாமரைப்பாக்கம் தலா 4 செமீ மழையும், ஆர்.கே.பேட்டை, பூவிருந்தவல்லி 3 செமீ, திருவாலங்காடு, திருத்தணி 2 செமீ, பூண்டி 1 செமீ மழை பதிவாகியுள்ளது.  நேற்று இரவு பெய்த மழையால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.