கொட்டும் கனமழை- கணிக்கத் தவறியதா வானிலை மையம்?
சென்னையில் கனமழையை கணிக்கத் தவறியதா வானிலை மையம்? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

நேற்றிரவு முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை நகர்ப்புறங்களில் இடைவிடாத மழை பதிவாகி வருகிறது. வானிலை மைய எச்சரிக்கைகளையும், நிலைமையின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, பொதுவாக முன் இரவு அல்லது காலையில் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இன்றைய தினம் இது இடம்பெறாததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென்று வர வேண்டிய சூழல் உருவானது. இந்த நிலை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை தூண்டியது. ‘‘இத்தகைய தொடர்ச்சியான மழையிலும் ஏன் பள்ளி விடுமுறை அறிவிக்கப்படவில்லை?’’ என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான நாளைய (டிசம்பர் 2) பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர்களால் இன்று மாலையே வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகாலை முதல் தொடர் மழை பெய்துவருகிறது. வானிலை மையம் உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்காத நிலையில் மழை நீடித்துவருகிறது. மழைக்கு மத்தியில் பள்ளிகள் செயல்பட்டதால் மாணவர்கள், பெற்றோர் கடும் அவதிக்குள்ளான நிலையில் சென்னையில் கனமழையை கணிக்கத் தவறியதா வானிலை மையம்? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். நாளையும் இதேபோல் மழை தொடரும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


