சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை- ஒரு மணி நேரம் விடாது பெய்தது
சென்னை திருவொற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு, இராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக இடியுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. ஒரு மணிநேரமாக பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்கெட் பகுதியில் தீடீரென பெய்த கன மழையால் பூ விபாரிகள், நடைபாதை வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று காலை தொடங்கிய லேசான சாரல் மழை சிறிது நேரத்திற்கு எல்லாம் ஓய்ந்து வெயில் வெளுத்து வாங்கியது. இதனையடுத்து இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டமாக இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்தது. மாலையில் இருண்ட மேகங்கள் கரை புரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் இருந்த நிலையில், திடீரென்று கனமழை வெளுத்து வாங்கியது.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெளுத்து வாங்கிய கனமழையினால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே வாகனங்களை இயக்கி சென்றனர். ஒரு மணி நேரம் பெய்த கனமழையினால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.


