தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை- சென்னையில் பரவலாக மழை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் இன்று காலை நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு முதலே சென்னையில் பரவலாக மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. குறிப்பாக தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், அடையார், கிண்டி போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளின் காரணமாக தொடர் மழை பெய்தும் பரவலாக சென்னையில் எந்த பகுதியிலும் சாலைகளில் நீர் தேங்காமல் உள்ளது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரும் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது தெருவில் மழை காரணமாக ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தீயணைப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.