சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்துவாங்கிய மழை

சென்னை புறநகர் பகுதிகளான திருமுல்லைவாயில் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் 1 மணி நேரம் கன மழை பெய்து.
சென்னை புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வந்த நிலையில், இன்று மாலை திடீர் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்தது. ஆவடி சுற்றுவட்டார பகுதி ஆவடி புதிய ராணுவ சாலை, கோவில் பதாகை மற்றும் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரமாக கன மழை பெய்தது.
குறிப்பாக ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. அதேபோல் புதிய ராணுவ சாலைகளும் மழை வெளுத்து வாங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த மழையின் காரணமாக ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல் பட்டாபிராம், இந்துக்கல்லூரி, அண்ணா நகர், சேக்காடு, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை காரணமாக வளாகங்களுக்கு செல்ல இயலாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி அண்ணா சாலை, தி.நகர் தேனாம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.