"பாராசிட்டமால்" சாப்பிட வேண்டாம் - சுகாதாரத் துறையின் அதிரடி எச்சரிக்கை..!​​​​​​​

 
1

நம்மில் பலர் காய்ச்சல் வரும் நேரத்தில் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொள்வதுண்டு. இப்படி செய்யக்கூடாது என்று பல முறை மருத்துவர்களே அறிவுறுத்தியும், யாரும் அவர்களின் பேச்சினை கேட்ட பாடில்லை. இதையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரையின்றி, பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூடாது என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை வெயிலால், ஏற்கனவே உடலின் வெப்பநிலை அதிகரித்து இருக்கும். யாராவது, சோர்வடைந்து மயக்கம் என்று படுத்துவிட்டால் அதை சாதாரண காய்ச்சல் என்று நினைத்து, பாராசிட்டமால் இல்லையென்றால் ஆஸ்பிரின் உள்ளிட்ட மாத்திரைகளை வழங்கக்கூடாது என்று பொது சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. 

பாராசிட்டமால் ஏன் ஆபத்தானது?

கோடை காலத்தில் ஏற்கனவே உடலில் வெப்பமானது அதிகமாக இருக்கும். இந்த வெப்பத்தால் வெப்பவாதம் (Heat Stroke) ஏற்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராசிட்டமால் கொடுக்கும் போது அவை கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரு சில நேரங்களில், இதனால் உயிருக்கே ஆபத்து கூட வரலாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுக்கிறது. 

வெப்பவாதம், உடலில் சாதாரணமாக ஏற்படும் காய்ச்சல் கிடையாது. சாதாரண காய்ச்சலில், மூளையில் இருக்கும் வெப்ப கட்டுப்பாட்டு மையம் வெப்பநிலையை உயர்த்தும். ஆனால், வெப்பவாதம் என்பது, வெளியிலிருக்கும் கடும் வெப்பத்தால் உடலின் குளிரூட்டும் அமைப்பு செயலிழந்து போவதால் ஏற்படும் ஒன்றாகும்.

பாராசிட்டமால் விளைவுகள்..

பாராசிட்டமால் போன்ற சில மருந்துகள், மூளையில் இருக்கும் காய்ச்சல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் உடலின் வெப்பத்தை குறைக்கிறது. ஆனால், வெப்பவாதம் ஏற்படும் போது, உடலின் வெப்பநிலை வெளிப்புற வெப்பத்தால் உயரும். இது, மூளையின் தூண்டுதலால் ஏற்படுவது அல்ல. எனவே, மருந்துகளை வைத்து உடல் வெப்பத்தை தணிப்பது என்பது இயலாத காரியம். அந்த சமயத்தில் பாரசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொண்டால்தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ரத்த கசிவு!

வெப்பவாதம் ஏற்படுகையில், உடலில் ரத்த ஓடமானது குறைய வாய்ப்பிருக்கிறது. இது கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தின் அளவையும் பாதிக்கலாம். இந்த நிலையில், பாராசிட்டமால் உட்கொள்வது என்பது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் கல்லீரலை மேலும் பாதிக்கலாம். ரத்தத்தில் உள்ள தட்டுகள் மற்றும் ரத்தம் உறைவதற்கான காரணியாக, இது இருக்கலாம். இந்த சமயத்தில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் ரத்தத்தை மேலும் நீர்க்க செய்யும். இதனால் உட்புற ரத்தக்கசிவும் ஏற்படலாம். 

வெப்பவாதத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கோடை வெயில் காலத்தில் அதிகளவில் வெப்பவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமன்றி, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போதும், இது போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை பாதித்து, சிறுநீரக செயலிழப்பை உண்டாக்கலாம். வெப்பவாதம் ஏற்படும் போது, ஐஸ் கட்டிகள் அல்லது குளிர் நீரால் உடலை துடைக்க வேண்டும். ஏசி, மின்விசிறியின் கீழ் படுக்க வேண்டும். இதனை பாராசிட்டமால் போன்ற மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது என்று கூறியிருக்கும் சுகாதாரத்துறை, அதற்கு குளிர்விப்பு முறையே பாதுகாப்பானது என்று தெரிவித்திருக்கிறது.