வடமாநிலத்தவர்களை தாக்கிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்..!

 
1 1

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் மோகன்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு காஞ்சிக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு துரித உணவகம் இரவு 10 மணியைக் கடந்தும் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

அந்த உணவகம் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமானது. அங்கு மூன்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். மேலும், சில பொதுமக்கள் அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட காவலர் மோகன்குமார், கடையை உடனடியாக மூடுமாறு கூறி அங்குள்ள ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆவேசமடைந்த காவலர், தனது கையில் இருந்த லத்தியால் கடையில் இருந்த பொருட்களைத் தட்டிவிட்டு ரகளையில் ஈடுபட்டார். "10 மணி ஆகியும் கடையை ஏன் திறந்து வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டு, அங்கிருந்த ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் வசைபாடியதுடன், அவர்களைத் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த உணவக ஊழியர்கள், "நாங்கள் இங்கு வேலை செய்ய மட்டுமே வந்துள்ளோம்; எதுவாக இருந்தாலும் கடையின் உரிமையாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறியுள்ளனர். இருப்பினும், அவர்களின் பேச்சைப் பொருட்படுத்தாத காவலர் மோகன்குமார், தொடர்ந்து அநாகரிகமாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் உணவகத்தில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானது. இது தொடர்பாகத் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட நடவடிக்கையாகத் தலைமைக் காவலர் மோகன்குமாரை ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, துறை ரீதியான தீவிர விசாரணைக்குப் பிறகு மோகன்குமாரைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து மாவட்ட எஸ்பி சுஜாதா அதிரடி உத்தரவிட்டுள்ளார். வடமாநிலத் தொழிலாளர்கள் மீது காவலரே அநாகரிகமாக நடந்துகொண்ட இந்தச் சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.