வாக்குச்சாவடி மையத்தில் தலைமைக் காவலருக்கு கத்திக்குத்து

 
s

பூம்புகார் சட்டமன்ற தொகுதி ஜமாலியா நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி 324 வது பூத்தில் தலைமை காவலர் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் காலை ஏழு மணிக்கு துவங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11மணி வரை 36. 65 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குத்தாலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் விக்னேஷ் என்பவரை  ஒருவர் திடீரென்று தன் கையில் எடுத்து வந்திருந்த சிறிய கத்தியால் சாரா மாறியாக கழுத்து இரண்டு கைகளில் குத்தி கிழித்துள்ளார். 

தலைமை காவலர் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே தலைமை காவலருக்கு தையல் போடப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தலைமை காவலரை தாக்கிய நபர் காட்டுச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும்  காவல்துறையினர் மீது வெறுப்பில் இருப்பவர் என்றும் சீருடையில் கண்டால் அவருக்கு பிடிக்காது என்றும் இதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போலீசார் ஒருவரை  தாக்கி உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் பிரபாகரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாக்குச்சாவடி மையத்திலேயே தலைமை காவலர் கத்தியால்  தாக்கப்பட்ட சம்பவம் வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.