’தரையில உட்காரு’... ரயிலில் மாற்றுத்திறனாளி கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு
நீடாமங்கலம் தலைமை காவலர் குடிபோதையில் மன்னார்குடி விரைவு பயணிகள் இரயில்வண்டியில் மாற்றுத்திறனாளி இரயில் பெட்டியில் ஏறி அங்கிருந்த மாற்றுத்திறனாளியை கொடூரமாக தாக்கிய சம்பவம் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக சென்னைவரை செல்லும் பயணிகள் விரைவு வண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இரயில் பெட்டியில் கருணாநிதி என்பவர் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்துள்ளார். அப்போது பயணிகள் இரயில் நீடாமங்கலம் இரயில்நிலையம் வந்தபோது நீடாமங்கலம் காவல்நிலையத்தில தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பழனிவேல் என்பவர் அனைத்து இரயில் பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாற்றுத்திறனாளிகளது இரயில் பெட்டியில் விதிமுறைகளை மீறி ஏறியுள்ளார். அப்போது அப்பெட்டியில் பயணித்த கால்களை இழந்த மாற்றுத்திறனாளி கருணாநிதி என்பவரை குடிபோதையில் இருந்த தலைமைகாவலர் பழனிவேல் நான் போலீஸ் நான் மட்டும்தான் சீட்டில் உட்காருவேன் என கருணாநிதியை மிரட்டியதோடு தரையில் உட்காரு என தாக்கியுள்ளார்.
அப்போது மாற்றுதிறனாளி கருணாநிதி, இந்தபெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கானது எனவும், போலீஸாக இருந்தாலும் இதில் ஏறக்கூடாது என கூறினார். அப்போது ஆத்திரம் அடைந்த குடிபோதையில் இருந்த காவலர் பழனிவேல் தகாத வார்த்தைகளால் அவரைதிட்டி மீண்டும் தாக்கியுள்ளார். இதனை அப்பெட்டியில் இருந்த மாற்றொரு மாற்றுதிறனாளி தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இந்நிலையில் மாற்றுதிறனாளி கருணாநிதி திருவாரூர் இரயில்வே இருப்புபாதை காவலரிடம் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் தலைமை காவலர் பழனிவேல் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மாற்றுதிறனாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, தலைமை காவலர் பழனிவேலை கைது செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.