யாரோ துரத்துறாங்கனு சொல்லி உள்ள வந்தான்... அப்புறம் நடந்ததே வேற..! – இந்திரா நகரை உலுக்கிய பகீர் சம்பவம்!
பெங்களூருவின் பரபரப்பான இந்திரா நகர் பகுதியில், கடையில் தனியாக இருந்த பெண் ஊழியரின் கைகளில் 'பெவிக்விக்' (Fevikwik) பசையை ஊற்றி மேசையோடு ஒட்டவைத்து, கழுத்தில் கத்தியை வைத்து ₹4.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபரைக் பொதுமக்கள் அதிரடியாக மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி காலை 11.45 மணியளவில் இந்திரா நகரில் உள்ள ஒரு கடையில் இச்சம்பவம் நடந்துள்ளது. பிரபுராஜ் (என்ற) ராஜ் என்ற டெலிவரி ஏஜென்ட், கடைக்குள் நுழைந்து தன்னை யாரோ கொலை செய்யத் துரத்துவதாகவும், தஞ்சம் தருமாறும் அந்தப் பெண்ணிடம் கோரியுள்ளார். ஆனால், சில நிமிடங்களிலேயே தனது நிஜ ரூபத்தைக் காட்டிய அக்கிரமக்காரன், திடீரெனக் கத்தியை எடுத்து அப்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டத் தொடங்கினான்.
பெண் எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காக, அவளது இரு கைகளிலும் பெவிக்விக் பசையை ஊற்றி, கடையில் இருந்த மேசையோடு ஒட்ட வைத்தான். பின்னர், அவள் அணிந்திருந்த 35 கிராம் எடையுள்ள (மதிப்பு சுமார் ₹4.5 லட்சம்) தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றான். அப்பெண் அலறிய சத்தம் கேட்டு, அருகில் இருந்த கடைக்காரர்களும் பொதுமக்களும் ஓடி வந்தனர்.
மக்களைப் பார்த்ததும் பெண்ணைக் கேடயமாகப் பயன்படுத்தித் தப்ப முயன்ற பிரபுராஜ், யாராவது அருகில் வந்தால் பெண்ணைக் கொன்றுவிடுவதாகக் கத்தியைக் காட்டி மிரட்டினான். இருப்பினும், பொதுமக்கள் சாமர்த்தியமாக அவனது கவனத்தைத் திசைதிருப்பி, அப்பெண்ணை பத்திரமாக மீட்டு, கொள்ளையனைப் பிடித்து இந்திரா நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த இந்திரா நகர் போலீசார், பிரபுராஜைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இக்கொடூரச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, கடை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்துக் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Bengaluru இந்திராநகரில் பெண் ஒருவரின் கைகளில் ஃபெவிக்விக் பசையை ஊற்றி மேஜையோடு ஒட்டி, கத்திமுனையில் சங்கிலி பறிக்க முயன்ற பிரபுராஜ் என்ற நபரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்திராநகர் காவல் துறையினர் கொள்ளையனைக் கைது செய்தனர். https://t.co/0KaJkYEJEh
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 3, 2026
#Bengaluru இந்திராநகரில் பெண் ஒருவரின் கைகளில் ஃபெவிக்விக் பசையை ஊற்றி மேஜையோடு ஒட்டி, கத்திமுனையில் சங்கிலி பறிக்க முயன்ற பிரபுராஜ் என்ற நபரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்திராநகர் காவல் துறையினர் கொள்ளையனைக் கைது செய்தனர். https://t.co/0KaJkYEJEh
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 3, 2026

