மாம்பழ சின்னம் - தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு...!
வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி, அன்புமணி ராமதாஸ் முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், 'அன்புமணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதமே முடிந்து விட்டது. ஆனால், பாமக தலைவர் என்று போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்க செய்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எனக்குதான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்.
எனவே, அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். என் முகவரிக்கு கடிதத்தை அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக, தேர்தல் ஆணையம் 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அன்புமணி தரப்பு வாதிட முயன்ற நிலையில், எதிர் தரப்பினராக இல்லாதபோது வாதிட முடியாது என ஐகோர்ட்டு நீதிபதிகள் அனுமதி மறுத்தனர்.


