இன்னும் அப்ளை பண்ணலையா? பாராமெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 7 வரை டைம் இருக்கு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இன்று ஜூலை 03- ஆம் தேதி வரை https://regpmc.tnmedicalonline.co.in/pmc26 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் ஜூலை 7- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், இளநிலை பேச்சு பயிற்சி, செயற்கை உறுப்பு சாதனங்கள் தொழில்நுட்பம், இயன்முறை மருத்துவம், தொழில்முறை சிகிச்சை, இருதய மருத்துவம் மற்றும் நுரையீரல் துறை, இருதய தொழில்நுட்பம், தீவிர சிசிச்சை தொழில்நுட்பம், நரம்பியல் மின் உடலியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதேபோல், மருத்துவ கதிரியக்கவியல் மற்றும் கதிரியக்கவியல் (Bachelor of Medical Radiology and Imaging Technology), கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்பம் (Bachelor of Radiation Therapy Technology), மருத்துவ ஆய்வக அறிவியல் (Bachelor of Medical Laboratory Science), மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சையறை தொழில்நுட்பம் (Bachelor of Anaesthesia and Operation Theatre Technology), டயாலிசிஸ் சிகிச்சை தொழில்நுட்பம் (Bachelor of Dialysis Therapy Technology), மருத்துவர் உதவியாளர் (Bachelor of Physician Associates), அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பாராமெடிக்கல் (Bachelor of Emergency Medical Technologist), சுவாச தொழில்நுட்பம் (Bachelor of Respiratory Technology), கண் பரிசோதனை மற்றும் பார்வை தொழில் நுட்பம் (Bachelor of Optometry), ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை (Bachelor of Nutrition and Dietetics (Honours) ஆகிய படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவ சமூகவியல் (B.Sc. Medical Sociology), அணு மருத்துவ தொழில்நுட்பம் (Bachelor of Science in Nuclear Medicine Technology), சுகாதார மேலாண்மை (Bachelor of Science in Health Information Management) உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு https://tnmedicalselection.net என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் பார்ம் டி, பார்ம், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ பார்மசி ஆகிய படிப்புகளுக்கு ஜூலை 07- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 21- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://tnmedicalselection.net/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம்:
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2026-2027, 2027-2028, 2028-2029 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கான துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசு அறிவித்துள்ளது. டிப்ளமோ சுகாதார ஆய்வாளர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 35,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 70,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
டிப்ளமோ நர்சிங் பொதுபாடத்திற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 35,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 75,000, துணை செவிலியர் மகப்பேறு பட்டயப் படிப்பு (diploma auxiliary nurse midwifery) அரசு ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 30,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 60,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ பார்மசி அரசு ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 25,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 50,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்சி நர்சிங், போஸ்ட் பிஎஸ்சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் ரூபாய் 60,000, நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் ரூபாய் 1.20 லட்சம், பிபார்ம், பிபிடி, பிஓடி, பிபார்ம் லேட்டரல் என்டரி அரசு ஒதுக்கீட்டு கட்டணம் ரூபாய் 50,000, நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் ரூபாய் 1 லட்சம், இளநிலை அலைடு ஹெல்த் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் ரூபாய் 50,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 1 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

