"நீங்களே முடிவெடுத்துட்டீங்களா?" - நயினார் நாகேந்திரன் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கொடுத்த தரமான பதிலடி..!

 
1

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நடப்பு பட்ஜெட்டை "காணல் நீர்" என விமர்சித்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத்திற்கான உருப்படியான திட்டங்கள் ஏதுமில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று அவர்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்ற ஐயப்பாடு எழுவதாகக் கூறினார். அதன் காரணமாகவே எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடவில்லை என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.


இதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இடைக்கால பட்ஜெட் என்பது நடப்பு அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடே தவிர, 2026-க்குப் பிந்தைய திட்டங்களுக்கானது அல்ல என்றார். மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு விரிவான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என விளக்கமளித்தார்.


அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்தை வழிமொழிந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்காலத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். முதலமைச்சர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் புதிய திட்டங்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என உறுதியளித்தார்.


தமிழகத்தின் கடன் சுமை குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அமைச்சர் எ.வ.வேலு விரிவான புள்ளிவிவரங்களை அளித்தார். அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்காக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.88 லட்சம் கோடி வட்டி கட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


அதிமுக ஆட்சியின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.6.45 லட்சம் கோடியாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், திமுக அரசு உண்மையில் ரூ.2.85 லட்சம் கோடி மட்டுமே கடன் வாங்கியுள்ளதாகக் கணக்கிட்டுக் காட்டினார். கடன் வாங்குவதில் திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். மாநிலத்தின் பாதுகாப்புச் சூழல் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் தனது உரையில் பதிவு செய்தார்.


இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றங்களைப் பற்றிப் பேசும்போது மணிப்பூர் விவகாரத்தையும் சேர்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றார். தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிடப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் உள்ளதாக அவர் கூறினார்.


மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதை "மேஜிக்" என விமர்சித்த நயினார் நாகேந்திரன், இதனை அரசியல் சலுகையாகவே பார்ப்பதாகக் கூறினார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலின்போது தராமல் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தருவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.


இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், "மோடி மஸ்தான் வேலை" என நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்ததைச் சுட்டிக்காட்டி, அதை நீங்கள் பிரதமரைக் குறிப்பிட்டதாகவே எடுத்துக்கொள்கிறேன் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும், பாஜக வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சம் என்ன ஆனது என வினவியதோடு விவாதம் அனல் பறந்தது.