நான் என்ன 3-வது மனுஷன் காலிலா விழுந்தேன்? பொங்கிய எடப்பாடி பழனிசாமி...!

 
1
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்தோம். அந்த கூட்டணியில் இருந்து தற்போது வெளியேறி விட்டோம். பாஜக தவறு செய்தால் நாங்கள் தட்டிக் கேட்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகின்ற திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோல்வி அடைவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வர். ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து ராமநாதபுரத்தில் தேர்தலில் போட்டியிடக் கூடிய 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது, 2 கோடி அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. தேர்தலில் மிட்டா மிராசுகள் நின்ற காலம் போய் சாமானிய தொண்டனும் போட்டியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.

சசிகலா காலில் விழுந்த படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டங்களில் காட்டி வருகிறார். அவர் படத்தைக் காட்டட்டும். பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே, வேற யார்கிட்டயும் 3-வது மனுஷன் காலில் விழலையே.. உங்களை மாதிரி வீரவசனம் பேசலையே.. வெளியே பிரதமரை எதிர்க்கிறோம் என்கிறீர்கள். கறுப்பு குடை பிடித்தால் கோபித்துக் கொள்வார் என வெள்ளை குடை பிடித்தவர்கள் திமுகவினர். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். அப்புறம் ஓடோடிப் போய் தமிழ்நாட்டு திட்டங்களை தொடங்கி வைக்க அழைக்கிறது.. அங்க சரணாகதி.. இங்க வீரவசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்
 

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.