தவெக அரசை விமர்சனம் செய்ததற்காக 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதா..? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!
தவெக அரசை விமர்சனம் செய்ததற்காக 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு தடை பட்டுள்ளதற்கான காரணத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; '3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட 3 சேனல்களை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட TN Fact Check என்ற சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தமிழக அரசு விளக்கம் அளித்திருப்பதை முன்னாள் பாஜ நிர்வாகி அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.அவர் விடுத்துள்ள பதிவில்; குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்னைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது. இது மாற்றம் இல்லை.
கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

