அதிமுகவை கைவிட்டதா பாமக..? இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக். 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தவெக, திமுக, அதிமுக, கம்யூ., நாம் தமிழர் கட்சிகள் களமிறங்கி உள்ளன.கடந்த சட்டசபை தேர்தலின் போது கூட்டணியில் இருந்ததால், தங்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறிவந்தார். பாமகவின் ஆதரவை பெற தவெகவும் முயற்சித்து வந்தது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவது இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெ ரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 06- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுச் செய்யப்பட்டிருந்தார். 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் பாமக ஆதரவு கிடைக்காதது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

