தமிழகத்தின் அடையாளமான A2B கைமாறியதா? 180 மில்லியன் டாலரில் நடந்த மெகா டீல் பின்னணி!
சென்னையைச் சேர்ந்த பிரபல உணவு பிராண்ட் A2B தனது பெரும்பான்மைப் பங்குகளை போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு 180 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி சைவ உணவகச் சங்கிலியான அடையார் ஆனந்த பவனின் (A2B) பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்த போதி ட்ரீ சிஸ்டம்ஸ் (BTS) நிறுவனம் 180 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
ஊடகத் துறை ஜாம்பவான்களான ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கர் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட முதலீட்டு நிறுவனமான போதி ட்ரீ சிஸ்டம்ஸ், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட A2B நிறுவனத்தின் வர்த்தகத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ளது.
தற்போது A2B நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் 160 கிளைகளையும், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் 30 சர்வதேசக் கிளைகளையும் நடத்தி வருகிறது.
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், A2B நிறுவனத்தின் புதிய இயக்குநர்கள் குழுவின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்கவுள்ளார். இந்தக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்ததாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும் என்றும், A2B நிறுவனத்தின் இணை நிறுவனர்களும் சகோதரர்களுமான கே.டி. ஸ்ரீனிவாச ராஜா மற்றும் கே.டி. வெங்கடேசன் ஆகியோர் இந்தப் பயணத்தில் தொடர்ந்து தங்களது வழிகாட்டுதலை வழங்குவார்கள் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த முதலீட்டின் மூலம் A2B நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்படுத்தப்படுவதுடன், டிஜிட்டல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு சமையலறைகள் நவீனமயமாக்கப்படும். மேலும், உற்பத்தித் தரத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்தவும், ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வகைகளை விரிவுபடுத்தவும், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் உணவகங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு வேதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் நிறுவனம் பிரத்யேக நிதி ஆலோசகராகச் செயல்பட்டது.
இந்தியாவில் A2B ஒரு வலிமையான பிராண்டாக உருவெடுத்துள்ளதாகவும், அதன் பாரம்பரிய உணவு வகைகளை உலகளாவிய வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கர் தெரிவித்துள்ளனர். தாங்கள் இணைந்து வகுத்துள்ள இந்தத் திட்டம், A2B நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான தகுதியைப் பெற வைக்கும் என்றும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் பங்குபெற முடியும் என்றும் A2B இணை நிறுவனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காலப்போக்கில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வந்த A2B நிறுவனத்தின் வரலாறு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தொடங்கியது. நிறுவனர்களின் தந்தையான கே.எஸ். திருப்பதி ராஜா 1960-களில் ராஜபாளையத்தில் 'ஸ்ரீ குரு ஸ்வீட்ஸ்' என்ற பெயரில் ஒரு சிறிய இனிப்புக் கடையைத் தொடங்கினார். பின்னர் 1975-இல் பெங்களூருவுக்குச் சென்று 'ஸ்ரீ ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ்' என்ற பெயரில் இனிப்புக் கடையை நடத்தினார். 1980-இல் மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்பிய அவர், வடசென்னையின் வண்ணாரப்பேட்டையில் 'ஸ்ரீ ஆனந்த பவன் ஸ்வீட்ஸ்' என்ற கடையைத் தொடங்கினார். 1980-களின் பிற்பகுதியில் அடையார் பகுதிக்குத் தங்களது கிளையை விரிவுபடுத்தியபோது, அது 'அடையார் ஆனந்த பவன்' எனப் பெயர் மாற்றம் பெற்றது.
இனிப்புகள் மற்றும் கார வகைகளுடன் தொடங்கிய இந்த நிறுவனம், பின்னர் சாட் வகைகள் மற்றும் சிற்றுண்டிகளை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து பல்வேறு வகையான உணவுகளையும் தனது பட்டியலில் இணைத்தது. 2000-ஆம் ஆண்டில் முழுநேர உணவகத் துறையில் கால்பதித்த இந்நிறுவனம், A2B என்ற பெயரில் தனது முதல் உணவகத்தை 2004-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் தொடங்கியது.

