ஹரியானா காங். தொண்டர் மரண வழக்கில் திடீர் திருப்பம்..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட 'பாரத் ஜோடோ' யாத்திரையில் அவருடன் பங்கேற்று பிரபலமானவர் ஹிமானி நர்வால். ஹரியானா காங்கிரஸ் சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கட்சிப் பணிகள் மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு பிரபலமாக இருந்தார்.
இந்நிலையில் ஹரியானாவின் ரோத்தக் நகரில் கடந்த சனிக்கிழமை ஹிமானியின் உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அவரது கொலை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜஜ்ஜார் மாவட்டம் பகதூர்கர் நகரை சேர்ந்த சச்சின் என்பவரை ஹரியானா போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர் ஹிமானியின் நண்பர் எனவும் இவரிடம் இருந்து ஹிமானியின் மொபைல் போன் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்படும் வரை ஹிமானியின் உடலை தகனம் செய்ய மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹிமானியின் சகோதரர் ஜதின் நேற்று கூறுகையில், “இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் ஹிமானியின் உடலை தகனம் செய்ய இருக்கிறோம். என்றாலும் கைது செய்யப்பட்டவரை எங்களுக்குத் தெரியாது. இதுகுறித்து போலீஸார் எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஹிமானியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்றார்.
கொலை செய்யப்பட்ட ஹிமானியும், சச்சினும் கடந்து ஓராண்டுக்கு மேலாக நண்பர்களாக இருந்ததாகவும், இருவரும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமானதாகவும் போலீஸார் கூறுகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட சச்சினின் கையில் பற்களின் தடங்கள் இருந்ததன என்றும், செல்போன் சார்ஜர் கேபிளைக் கொண்டு ஹிமானியின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.