போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரிஷ் கைது..

 
போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரிஷ் கைது..


சென்னை அண்ணா  பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் நீதிபதி வள்ளி நாயகம் பெயரில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்கிற அமைப்பின் நிர்வாகி ஹரிஷை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26 )  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சினிமா பிரபலங்களான இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்,  நகைச்சுவை நடிகர் வடிவேல் உள்ளிட்ட  பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.   முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயரில்  வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியானவை என்றும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என்பதும் தெரியவந்தது. இதில் முன்னாள் நீதிபதி வள்ளி நாயகம் அவர்களும் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

போலி டாக்டர் பட்டம்

இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கோட்டூர்புரம்  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏமாற்றுதல், மோசடி செய்தல், அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்துதல், தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டம் வழங்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  போலி கௌரவ டாக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்  ஹரிஷ் தலைமறைவானார்.   அவரை போலீசார் தற்போது தேடி வந்தனர்.

இந்நிலையில்  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரத்தில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் இயக்குனர் ஹரிஷ்  கைது செய்யப்பட்டுள்ளார்.  ஆம்பூரில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை  கைது செய்துள்ளனர்.