நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் கைது..!!

 
Q Q

திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் தொழிலதிபரிடம் ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்த ஹரி நாடார், திருச்சி அருகே காரில் சென்றபோது மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

சென்னையை சேர்ந்த ஆனந்த்குமார் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இவர், "மேட்டூர் சூப்பர் சர்வீஸ்" என்ற பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.

தன்னுடைய பிசினஸை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த பாலு என்பவர் மூலமாக, சென்னையில் வசித்து வரும், தென்காசி - நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரி கோபாலகிருஷ்ணன் என்கிற 41 வயது ஹரி நாடாரை அணுகியுள்ளார்.

ஹரி நாடார், ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை கடன் வாங்கித் தருவதாகவும், அதற்காக ரூ.77 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த்குமார், ரூ.70 லட்சத்தை வங்கி மூலமாகவும், ரூ.7 லட்சத்தை ரொக்கமாகவும் ஹரி நாடாரிடம் கொடுத்துள்ளார். கமிஷன் பணத்தைப் பெற்றுக் கொண்ட ஹரி நாடாரும் பாலுவும், ரூ.30 கோடிக்கு போலியான 4 டிமாண்ட் டிராஃப்ட்களை ஆனந்த்குமாரிடம் கொடுத்துள்ளனர். அவற்றை வங்கியில் செலுத்தியபோது, அவை அனைத்தும் போலியானவை எனத் தெரியவந்தது.

இதுகுறித்து, ஹரி நாடார் மற்றும் பாலுவிடம் கேட்டபோது, அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஹரி நாடார் சென்னையில் இருந்து காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, திருச்சி பைபாஸ் சாலையிலேயே அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரது காரை சோதனையிட்டபோது ரூ.12 லட்சம் முதல் ரூ.12.50 லட்சம் வரை ரொக்கம், 7 செல்போன்கள் மற்றும் 2 டாங்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல சேலத்தில் பாலுவையும் போலீசார் கைது செய்தனர்... கைதான இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர்.