ஹர்திக், அபிஷேக் அதிரடியில் இந்தியா வெற்றி..! - அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்து ஜிம்பாப்வேக்கு செக்!

 
1

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வாழ்வா-சாவா என்ற முக்கியப் போட்டியில், ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, முதலில் களம் புகுந்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா (55) மற்றும் சஞ்சு சாம்சன் (24) அதிரடியான தொடக்கம் தந்தனர். மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்து வெளியேற, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் குவித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.

இறுதி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஜோடி ஜிம்பாப்வே பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், அவருக்கு ஈடுகொடுத்த திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 44 ரன்களும் குவிக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. ஜிம்பாப்வே தரப்பில் மபோசா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

257 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில், ஒருமுனையில் தொடக்க ஆட்டக்காரர் பிரைன் பென்னட் ஆக்ரோஷமாக விளையாடி 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடினார். இருப்பினும், கேப்டன் சிக்கந்தர் ராஸா (31) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.