#JUSTIN மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்டு டிஸ்குகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு , சர்ச்சைகுரிய வகையில் உரையாற்றியதுடன், பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செப்.7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை, சென்னை சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மனு மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தது. இதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்காவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியம் முன்பு மகாவிஷ்ணு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதனை அடுத்து நேற்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற சைதாப்பேட்டை போலீசார் , இன்று காலை திருப்பூரில் உள்ள பரம்பொருள் பவுண்டேசன் அலுவலகத்திற்கு மகாவிஷ்ணுவை அழைத்து சென்றனர். காலை 10 மணி அளவில் அவிநாசி சாலையில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட மகாவிஷ்ணுவிடம் , 3 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தினர். தொடர்ந்து பரம்பொருள் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்களை கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பேக் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து விசாரணை முடிவடைந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை, திருப்பூரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருப்பூரில் விசாரணை முடிந்து மகாவிஷ்ணு நாளை மீண்டும் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வரவுள்ளனர்.