போலி வீடியோவை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஹர்பஜன் சிங்: பஞ்சாப் காவல்துறை கடும் கண்டனம்!
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங்,அசைவற்று இருக்கும் இரண்டு இளைஞர்களின் காணொளியைத் தனது எக்ஸ் கணக்கில் (முன்னர் ட்விட்டர்) பகிர்ந்து, பஞ்சாபில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்துக் கவலை தெரிவித்ததோடு, அம்மாநில இளைஞர்களின் அவல நிலையையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அரசாங்கங்கள் பஞ்சாபையும் அதன் இளைய தலைமுறையையும் பாழாக்கிவிட்டதாகக் கூறிய அவர், அம்மாநில இளைஞர்களைப் போதைப்பழக்கத்திலிருந்து 'காப்பாற்ற' அவசர முயற்சிகள் தேவை என்றும் அழைப்பு விடுத்தார்.
ஹர்பஜன் சிங் முதலில் ஆம் ஆத்மியில் இருந்து எம்பியானவர். அரவிந்த் கெஜ்ரிவால் தான் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பி இருந்தார். ஆனால், சமீபத்தில் ஆம் ஆத்மி எம்பிக்கள் பலரும் கட்சி மாறி பாஜகவில் ஐக்கியமாகி இருந்தனர். அதில் தான் ஹர்பஜன் சிங்கும் ஐக்கியமானார். இந்தச் சூழலில் தான் கட்சி மாறிய உடனேயே அவர் இந்த ஜாம்பி போதை பொருளை வைத்து ஆம் ஆத்மியை சாடினார்.
ஹர்பஜன் சிங் வீடியோவை பகிர்ந்த சிறிது நேரத்திலேயே பஞ்சாப் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் பல்ஜித் கவுர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த வீடியோ பஞ்சாபில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் நடந்த சம்பவத்தை பஞ்சாப் சம்பவம் போல் ஹர்பஜன் சிங் சித்தரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அந்த வீடியோ பஞ்சாபில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், அது தவறான தலைப்புடன் பரப்பப்பட்டிருந்தது என்றும் காவல்துறை கூறியுள்ளது.
X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வைரலானதால், அது பஞ்சாப் காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. அவர்கள் அதன் மூலத்தை உறுதிசெய்து, அந்தக் காணொளி உண்மையில் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கானகரில் படமாக்கப்பட்டது என்றும், அதற்கும் பஞ்சாபிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
தங்களது எக்ஸ் பக்கத்தில், பஞ்சாப் காவல்துறை இந்தியா, தவறான தகவலைத் தரும் காணொளியைப் பகிர்ந்ததற்காக ஹர்பஜன் சிங்கை கண்டித்ததுடன், ஒரு சம்பவத்தில் பஞ்சாபி ஒலி இருப்பதால் மட்டும் அது பஞ்சாப் சம்பவமாகிவிடாது என்றும் கூறியுள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் தவறான தகவலைத் தரும் உள்ளடக்கத்தைப் பதிவிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு, பயனர்கள் உண்மைகளையும் இடத்தையும் சரிபார்க்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
The video being circulated is from Sri Ganganagar, Rajasthan—not Punjab—and has no connection with Punjab Police.
— Punjab Police India (@PunjabPoliceInd) August 10, 2026
A Punjabi audio track does not make an incident a Punjab incident.
We urge users and social media accounts to verify the facts and location before posting… https://t.co/bNHwjXVXsC

